×

கொரோனா ஊரடங்கு உத்தரவால் சர்க்கஸ் தொழிலாளர்கள் உணவின்றி 15 நாளாக தவிப்பு: மானாமதுரை அருகே பரிதாபம்

மானாமதுரை: ஊரடங்கு உத்தரவால் மானாமதுரை அருகே சர்க்கஸ் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 15 நாட்களாக உணவின்றி தவித்து வருவதால் அரசு  நிவாரணம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, சிப்காட்  கங்கையம்மன் நகர், கலைக்கூத்து நகர், மாரியம்மன் நகர் ஆகிய இடங்களில் சர்க்கஸ் தொழில் செய்யும் 105 குடும்பங்கள் உள்ளனர். அஸாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர்கள் ஒட்டகம், ஆடு, குரங்கு, நாய் உள்ளிட்டவைகளை வைத்தும், அந்தரத்தில் கம்பியில் தொங்கியபடியே வித்தைகள் காட்டியும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நடக்கும் முக்கிய திருவிழாக்களுக்கு சென்று அங்கு டென்ட் அமைத்து சர்க்கஸ் நடத்தி, பொதுமக்கள் தரும் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர். கடந்த  மார்ச் 22ம் தேதி அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு தொடங்கியதில் இருந்து, தங்களது குடிசைகளை விட்டு வெளியே செல்லாமல் வீட்டினுள் முடங்கியிருப்பதால் உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர். ரேசன் கார்டுகள் உள்ள 55 குடும்பங்களை தவிர, மீதமுள்ள 50 குடும்பங்களுக்கு அரசின் நிவாரணம் கிடைக்கவில்லை. ஊராட்சி தலைவர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் கொடுத்த உணவுகளை வைத்து சமாளித்து வரும் இவர்களுக்கு உணவு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கங்கையம்மன் நகர் கதிரேசன், சந்திரன் கூறுகையில், ‘‘நாங்கள் இங்கு 105 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

இங்கிருந்து மதுரை மாவட்டம், பனையூர், விருதுநகர், சிவகாசி, முதுகுளத்தூர், திருவாடானை, காளையார்கோயில், தாயமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு சர்க்கஸ் தொழிலுக்கு 20 குடும்பங்கள் சென்றுள்ளனர். அரசின் தடை உத்தரவால் அங்கும் தொழில் செய்ய முடியாமல் இங்கும் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். இங்கிருக்கும் குடும்பங்களில் 50 குடும்பத்தினருக்கு மட்டும் ரேசன் கார்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. எங்களுக்கு உள்ளூரில் சிலர் உணவுகள் கொடுத்தனர். எந்தவித வருமானமும் இல்லாமல் குழந்தைகளை வைத்துகொண்டு, கடந்த 15 நாட்களாக போதிய உணவின்றி சிரமப்படுகிறோம். எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றனர்.

Tags : circus workers ,Corona ,food Circus workers , Corona curfew, circus workers, exhaustion
× RELATED கொரோனா ஊரடங்குதான் என்னை தொழில் முனைவோராக மாற்றியது!